பகுதி 23: இளையராஜாவின் Mad Mod Mood Fugue

 Fugue இசை குறித்த முந்தைய பகுதி : பகுதி 22 – Fugue இசைவடிவம்


Fugue இசைவடிவம் – அமைப்பு

Fugue ஒரு பல்லிழை இசைவடிவம் (Polyphonic form). 

Fugue இசையின் துவக்கத்தில், முதல் இழை ஒரு பாடற்பொருளில் (subject) துவங்குகிறது. அது முடியும் போது இரண்டாவது இழையும் அதே பாடற்பொருளை பதிலாக வழங்குகிறது.  ஆனால் வேறு சுருதியில் (key). இவ்வாறு இரண்டாவதாக வேறு சுருதியில் வரும் Subject பகுதி, Answer எனப்படுகிறது. 

இங்கு நாம் சென்ற பகுதியில் கண்ட இசையின் ஈர்ப்பு மற்றும் எதிர்விசை, பயன்பாட்டுக்கு வருகிறது. தொனியியலின் திசை நோக்கிய உறுதியான நகர்வாக, Fugue இசையில்  ஒரே பாடலின் இரு பகுதிகள், வெவ்வேறு key Center இல் அமைக்கப்படுகின்றன. 

உதாரணமாக, முதலில் கண்ட Bach இயற்றிய Fugue இசையை எடுத்துக் கொண்டு அணுகுவோம். முதல்  இழை ஒரு பாடற்பொருளைக் (Subject) கொடுக்க, அது முடிவுறும் போது இரண்டாவது இழை ( Answer) வேறொரு key  இல் ஒலிக்கிறது. முதல் இழையில் ஒலித்த அதே Subjectதான் இரண்டாவது இழையும். ஆனால் வேறு Keyஇல் அமைந்துள்ளதால் கொஞ்சம் உருமாற்றமடைந்து ஒலிக்கிறது.(**)

———————————————————————–

மேலே நாம் புரிதலுக்காக இரு இழைகளை தனித்தனியே கேட்டோம். ஆனால் மூலப்பாடலில் Subject இரண்டாம் இழைக்கு வரும் போது, முதல் இழை அமைதியாக இருப்பதில்லை.

இரண்டாவது குரல் துவங்கும் போது முதல் குரல் Counterpoint ஆக ஒலிக்கிறது. ஏற்கனவே இரண்டாவது குரலில் subject வேறு சுருதியில் உருமாறியுள்ளது. இப்போது அதனோடு முதல் குரலின் Counterpoint சேர்ந்து கொண்டு நம்மை குழப்புகிறது. 

Fugue எனும் சொல் Fuga எனும் லத்தீன வார்த்தையிலிருந்து பிறப்பது. இதற்கு “Fleeing from own identity”, அதாவது ஒருவர் தனது சொந்த அடையாளத்திலிருந்து மறைவாகத் தப்பித்தல் என்று பொருள். Fugitive எனும் சொல்லும் இதே வேர்ச்சொல்லில் பிறப்பதே. 

நாம் மேலே பார்த்த Bach Fugue துணுக்கு இதற்குச் சரியாகப் பொருந்துகிறது அல்லவா. முதலில் ஒலித்த subject, இரண்டாவது இழையில், தனது முதல் சுருதியிலிருந்து வேறொரு சுருதிக்கு சென்று தன்னை மறைத்துக் கொள்கிறது. போதாத குறைக்கு இரண்டாவதாக் தோன்றும் போது, முதல் இழை கொடுக்கும் Counterpoint அதன் அடையாளத்தை மேலும் மறைக்கிறது. அதாவது Subject இரண்டாவது இழையில் குரலை மாற்றி, தாடியும், மருவும் வைத்து வேஷமிட்டு நம்மை ஏமாற்றுகிறது. இப்படி பாடல் முழுதும் Subjectஆக முதலில் ஒலித்த இசைத்துணுக்கு ஒளிந்து மறைந்து நம்மை ஏமாற்றுகிறது.  ஒரு Fugitive போல.

———————————————————————–

Fugue இசைவடிவமானது முன்னுரை (exposition), வளர்ச்சி (development) என இரு பகுதிகளால் ஆனது.

Fugue இசையின் முன்னுரைப்பகுதி நாம் மேலே கண்டது. Fugue இசை subject அறிமுகத்தோடு துவங்கி, பல குரல்கள் ஒரே subjectஐ பல்வேறு சுருதிகளில் வழங்குவதாக அமைகின்றன. Fugue இசையின் துவக்கப் பகுதி மட்டுமே கறாரானது. அதாவது முதல் குரலின் subject, மற்ற பல குரல்களில் வெவ்வேறு சுருதியில் வரவேண்டும். 

அதன் அடுத்த பகுதியான வளர்ச்சிப்பகுதி சுதந்திரமானது. பொதுவாக துவக்கத்தில் வந்த Subjectஐ  எடுத்துக் கொண்டு, அதனை வளர்த்தெடுக்கும் பகுதியாகவே Fugue இசையின் வளர்ச்சிப்பகுதி அமைந்திருக்கும்.


Fugue வடிவத்தின் மைய நோக்கம்

நாம் மேலே கேட்ட Fugue இசையைக் மேலும் கூர்மையாகக் கண்டால், Bach எனும் இசையமைப்பாளனின் மேதமையைக் காணலாம். 

Subject இசையில் A என்று குறிக்கப்பட்டுள்ள பகுதியே, இரண்டாவது இழைக்கு Counterpoint இசையாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அவர் Subjectக்கு அளிக்கும் Counterpoint இசையும், Subject இசையிலிருந்தே பெறப்பட்டது. 

CPResultingEffect

கவனமாகத் மீண்டும் துணுக்கைக் கேட்டால் இந்த நேர்த்தியும், இதன் மூலம் இரண்டாவது இழை மேலே செல்வதைப்போன்ற உருமாற்றமும் பரவசமூட்டுவது. ஆக அவர் முதல் subjectஐ முடிவு செய்யும் போதே, இந்த சாத்தியங்களைக் கணக்கில் கொண்டிருக்க வேண்டும். Bach இசை முழுதுமே இப்படித்தான்.

ஆனால் மேலே சொன்னதை நாம் இசைக்குறிப்பைக் கண்டதால் மட்டுமே உள்வாங்கிக் கொண்டோம். இசையை மட்டும் கேட்டிருந்தால் இதனை உணரமுடியாது.  இத்தகைய உருமாற்றங்களின் பல்வேறு நுணுக்கங்களும்  உண்மையில் இவ்விசையை வாசிப்பவர்க்கும், அதனை இசைக்குறிப்புகளாகக் காண்போருக்குமே முழுதும் புலனாகும். ஏனெனில் நாம் இசையை எவ்வளவு கூர்மையாகக் கேட்டாலும் அதன் வெவ்வெறு இழைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது செவியில் மட்டும் புலனாகிவிடாது. நாம் இசையை Horizontal (temporal) ஆகக் கேட்கிறோம். ஒரு அளவிற்கு மேல் Vertical (spatial) ஆகக் கேட்க முடியாது. அதுவும் மூன்று நான்கு இழைகள் சேர்ந்து இயங்கும் போது எதில் என்ன நடக்கிறது என்பது துல்லியமாகத் தெரியாது.  இதன் பொருட்டே ஒரு Fugue இசையின் அனைத்து பரிமாணமும் அதனை இசைப்போருக்கே வாய்க்கிறது. 

இதன் ஒரு பலனாக Fugue ஒரு அதிநுட்ப இசையாக, கற்றலுக்கும் (Didactic form) பயிற்சிக்கும் ஆராய்ச்சிக்குமான இசையாக விளங்குகிறது.

எனில் இதில் கேட்போருக்கு ஒன்றுமில்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது. எல்லா நுட்பங்களையும்  உணர முடியாவிட்டாலும், ஒரு Subject குழப்பமூட்டும் பல்வேறு  உருமாற்றங்களைச் சந்தித்தாலும், அதன் போக்கு காட்டல் நம்மைப் பரவசப்படுத்தக் கூடியது. கிட்டத்தட்ட நமது செவி Subjectஐ ஒரு Fugitive ஆகவே துரத்துகிறது. கண்டுபிடித்துக் கொள்ளும் போது பரவசமாகிறது. கூடவே அதன் சுருதி மாற்றங்கள் (Centrifugal விசையை பயன்படுத்துவதால்) வழங்கும் அற்புத செவியனுபவமும் சேர்ந்து கொள்கிறது. இவ்வாறு Subjectஐ ஒளித்தும் நமக்கு போக்கு காட்டியும், நேர்த்தியாக மறைவிலிருந்து வெளிக்கொணர்ந்து வழங்கி நமது செவியைப் பரவசப்படுத்துவதில்    இசையமைப்பாளரின் திறமை இருக்கிறது.


இளையராஜாவின் – Mad Mod Mood Fugue

இதுவரைக் கண்ட விளக்கங்களைக் கொண்டு, நாம் ராஜாவின் Fugue இசைக்கு வருவோம்.

சென்ற பகுதியில் அவரது Nothing But Wind தொகுப்பில் Concerto இசையின் கூறுகள் காணக்கிடைப்பதைப் பார்த்தோம்.  அக்காலத்தில் கிழக்கு மேற்கின் கலப்பிசையாக, இந்திய இசையில் Concerto அறிமுகமானாலும் இன்று வரையில், இந்தியஇசையில் Concerto நேர்த்தியாக வெளிப்படுவது அவரது இசையிலேயே என்று கண்டோம்.

இக்காலகட்டத்தில் வெளியான அவரது மற்றொரு தொகுப்பான How to Name it தொகுப்பின் இரண்டாவது பாடலாக, சுமார் 2 நிமிடங்கள் ஒலிக்கக்கூடிய Mad Mod Mood Fugue இடம்பெற்றுள்ளது. மூன்று வயலின் இழைகளின் Fugue இசையாக பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

முதலில், பாடலை நாம் இதுவரை கண்ட Fugue இசையின் அமைப்பைக் கொண்டு அணுகிப் பார்ப்போம். இப்பாடல் முன்னுரை மற்றும் ஒரு சிறிய வளர்ச்சிப் பகுதி கொண்டு அமைகிறது. முன்னுரை முதல் 1.20 நிமிடங்கள் வரையிலானது. பிறகு ஒரு சிறிய வளர்ச்சிப் பகுதி.

பாடலின் துவக்கத்தில் முதல் வயலின் இழை Subject இசையை அறிமுகப்படுத்துகிறது. அது முடிவுறும் போது சுமார் 8 வினாடிகளில் அடுத்த இழை பதிலாக நுழைகிறது. அப்போது முதல் இழை Counterpoint இசையாக ஒலிக்கிறது. பிறகு இவை இரண்டும் ஒரு சிறிய உரையாடலை நிகழ்த்தி படிப்படியாக பதற்றத்தைக் கூட்டிக் கொண்டே சென்று சுமார் 36 வினாடிகளில் மீண்டும் வேறு சுருதியில் Subject, பிறகு சுமார் 53 நொடியில் மீண்டும் மற்றொரு keyஇல் அற்புதமாக Subject வெளிப்படுகிறது.

பிறகு ஒரு மிகச்சிறிய வளர்ச்சிப் பகுதியாகி பாடல் நிறைவுறுகிறது.

———————————————————————–

இதன் முதல் இரு இழைகளின் இசைக்குறிப்புகளைக் காண்போம்.

இதில் முக்கியமாகக் காண வேண்டியது, இரண்டாம் இழை  பொதுவாக fugue இசையில் வழங்கப்படுவதைப் போல நேரடியாக subjectஐ வழங்காமல் கொஞ்சம் மாற்றியமைத்து வழங்குகிறது. நாம் கண்ட Bach Fugue இசையில் Answer பகுதி subject பகுதியை சிறிதும் மாற்றாமல் (ஆனால் வேறு சுருதியில்) வழங்குகிறது எனக்கண்டோம். இது Real Answer எனப்படுகிறது. ஒரு இசையமைப்பாளர் பல்வேறு காரணங்களுக்காக answer பகுதியைக் கொஞ்சம் மாற்றி அமைக்கலாம்.அது tonal answer எனப்படுகிறது. அதேவேளையில் பிற பகுதிகளில் அறிமுகமாகும் போது நமக்கு  Real Answer (பெருமளவில்) கேட்கக்கிடைக்கிறது.


 ராஜாவின் Fugue – மையநோக்கம்

இதுவரை நாம் கண்டவற்றைக் கொண்டு இப்பாடல் Fugue வடிவத்தை எவ்வாறு கொண்டுள்ளது என்றும் அதன் செவியனுபவம் நமக்கு கிடைப்பதையும் எளிதாகக் கண்டு கொள்ளலாம் . Subjectஐ முதல் இழையில் அறிமுகப்படுத்தியும், அதனை பிற இழையில் உருமாற்றியும், வேறு Keyஇல் அற்புதமாக வழங்கியும்,  ஒரு Fugue இசையில் மையமாகக் கிடைக்கும் செவியனுபவம் நமக்கு இதில் கிடைத்துவிடுகிறது.

ஆனால் இங்கே கேள்வி, இளையராஜா இந்த சிறிய fugue இசையை ஏன் அமைத்தார் என்பதே?

நிச்சயம் இது ஒரு நல்ல fugue இசைதான் என்றாலும், இது ஒரு சிறிய fugue முயற்சி மட்டுமே. மேற்கின் விரிவான Fugue படைப்புகளோடு இதனை ஒப்பிட முடியாது. அதே வேளையில் இந்தியாவிலும் தமிழ்ச்சூழலிலும் இவ்வகை Fugue இசையின் அறிமுகமில்லாததால், அறிமுகப்படுத்தும் நோக்கில் வழங்கி இருக்கலாம் என்றும் நாம் கருதலாம். நிச்சயம் இந்நோக்கில் இம்முயற்சி முக்கியமானது தான். இதுவரையிலும் கூட இங்கே இத்தகைய மேற்கிசை வடிவங்கள் முயன்றுபார்க்கப்படவில்லை.

ஆனால் இவ்வாறு மேற்கிசையினை அறிமுகப்படுத்துவதோடு நில்லாது, ராஜாவின் இசை முயற்சிகள் என்றுமே ஒரு எதிர்பாராத கோணத்தைத் தரவல்லவை என்பது பழகிப்போன படிப்பினை.

———————————————————————–

ஆம்..இந்த Fugue இசையின் மைய நோக்கம் மேற்கிசை வடிவத்தை நமக்கு வழங்குவது மட்டுமல்ல. Mad Mod Mood Fugue இசையின் மைய நோக்கம், How to Name it தொகுப்பின் அட்டைக்குறிப்பு வாயிலாக நமக்கு புலனாகின்றது.

CPE Bach தனது தந்தையின் மரணம் குறித்து நாடகீய பாணியில் எழுதியுள்ள குறிப்பைப் போல எழுதப்பட்டுள்ள How to Name it தொகுப்பின் அட்டைக்குறிப்பு, Mad Mood Fugue பாடலைப் பற்றி பின்வருமாறு சொல்கிறது.

IntroNote

“An exotic strain runs through the theme of Raga Maya Malava Gowla introducing a fugue composed for three voices following traditional fugue rules.  The diatonic notes with underlying modulations are heard in second part of the Ragam. There is no vestige of Chromatic throughout.”

இதில் மிகக்குறிப்பாக காண்வேண்டியது, மாயமாளவ கொளை ராகத்தில் அமைந்துள்ள இந்த இசையில் “There is no vestige of chromaticsm” எனப்படும் குறிப்பே.

அதாவது இந்த சிறிய Fugue இசை, மாயமாளவ கொளை ராகத்தில் அமைந்தது. அது மட்டுமில்லாமல் இசையில் இந்த ராகத்திற்கு பொருந்தாத அன்னிய சுரங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை. அதாவது இசை முழுதும் ராகத்திற்குள் நிற்கிறது.


நமது கர்னாடக இசையில், பாடல்கள் ஓரு ராகத்திற்குள் நிற்பவை, ராகத்தின் சுரங்களை மட்டும் பயன்படுத்துபவை. ராகத்தில் அமையும் பாடல்களில் அன்னிய சுரங்களை பயன்படுத்துவதில்லை. அவை ராக அனுபவத்தில் தடையினை உண்டாக்குபவையாகக் கருதப்படுபவை. அவை ஓற்றை சுருதியில் இயங்குபவை.

ஆனால்  Fugue இசை, சுருதி மாற்றங்களைக் கையாளும் இசைவடிவம். இதன் காரணமாக, சுருதி மாறும் போது, முதல் சுருதிக்கு அன்னியமான சுரங்கள்  அடுத்த பகுதியில் இடம்பெறும் இசைவடிவம்.

ராஜா இந்த இரண்டு வடிவங்களையும் காண்கிறார். அவருக்கு கர்னாடக இசையின் ராக அழகும், fugue இசையின் விறுவிறுப்பும், நுட்பமும்   கலந்திசைக்க  வேண்டிய ஒன்றாகத் தோன்றுகிறது. எனவே ராகத்திற்குள் நிற்கும், அதே வேளையில் Fugue இசையின் செவியனுபவத்தை வழங்கும் பல்லிழைப் பாடலாக அதனை அமைக்கிறார். இதற்காகவே அவரது subject அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாது இழை Tonal answerஆக ராகத்திற்குள் நிற்பதாக இயங்குகிறது.

இப்பாடலில் Fugue வடிவம் எதை வழங்குகிறது எனக்கண்டோம். Subjectஐ அறிமுகப்படுத்தியும், ஒளித்து போக்கு காட்டியும், பிறகு மீண்டும் தோன்ற வைத்து நமக்கு செவியின்பமாகிறது. ஆனால் இப்பாடலில் மாயமாளவ கொளை ராகம் எதனை வழங்குகிறது?

இந்தப் பாடலின் Subject துவங்கும் போதே, ராக அழகில் துவங்கிவிடுகிறது. பாடலின் துவக்கத்தை மேற்கத்திய இசைக்குறிப்பாக கேட்டுப் பாருங்கள்.

இதனை மேற்கிசை பாணியில் கேட்பதற்கும், கர்னாடக இசையின் அழகியலோடு ஒலிக்கும் மூல பாடலுக்கும் எவ்வளவு வேறுபாடு.

மூலபாடலின் ஒவ்வொரு சுரமும் மேற்கிசை போல Flatஆக வெளிப்படவில்லை. மாறாக ஒவ்வொரு சுரமும் தனக்கென பிரத்யேக அணிகலனோடு வெளிப்படுகிறது. உண்மையில் சிலவற்றை சுரங்கள் என்பதை விட அவை இரு சுரங்களுக்கு இடையில் நில்லாமல் நிற்கின்றன. ஒவ்வோரு சுரமும் தனக்கென பிரத்யேக அழகியலில் ஒளிர்கிறது. இதுவே கிழக்கு மேற்கிற்கு அளிப்பது. எவ்வளவு Ornamental notations கொண்டு குறித்தாலும் இது மேற்கிசையில் வாய்க்காது. 

மேற்கிசை overtone வரிசையைக் கைக்கொண்டு  key center இசைக்குள் சென்று விடுகிறது. அதே சுரங்களின் Overtone தன்மையை, முற்றிலும் வேறு வகையில் கிழக்கு தனது  சுரங்களின் உபசுரங்களை வெளிக்கொணரும் கமகங்களின் மூலமாக வழங்குகிறது. இவை இரண்டின் சாத்தியங்களும் இவ்விசையில் அருககருகே காட்சியளிக்கின்றன. கர்னாடக இசையின் விதிகளுக்குள் நின்று ஒரு பல்லிழை Fugue சாத்தியமாகிறது. Fugue இசையில் ராகத்தின் அழகியல்.

———————————————————————–

இந்த இடத்தில் நாம் ராஜாவின் இசையைக் கவனமாக அணுகுவதன் தேவையை உணர வேண்டும்.  அவரது இசையை மேற்கிசை மட்டும் கொண்டு, அல்லது கர்னாடக இசை கொண்டு மட்டும் அணுகுவது பெரும் போதாமை.

இவ்விசையை மேற்கிசை மட்டும் கொண்டு அணுகும் ஒரு மேற்கிசை வல்லுனர், இது ஒரு சாதாரணமான Fugue என்று ஒதுக்கிவிடலாம். அது ஒரு வகையில் உண்மையும் கூட. பல்வேறு நுட்பங்களைத் தாங்கிய மேற்கின் Fugue இசையோடு ஒப்பிட்டால் இவ்விசை முக்கியத்துவமற்றதாகிறது.

போலவே, இதனை வெறும் மாயமாளவகொளை இசையாக அணுகும் ஒரு கர்னாடக இசைக் கலைஞர் இதனை ஒரு முழுமையற்ற ராக முயற்சி என்று சொல்லலாம். அதுவும் உண்மைதான். மாயமாளவகொளையில் அமைந்த கீர்த்தனையிலும், ஆலாபனையிலும் வாய்க்கும் ஆழமோ விரிவோ இதில் வாய்க்காமல் இருக்கலாம்.

ஆனால், இந்த இரண்டு பார்வைகளையும் ஒருங்கே கொண்டு நோக்கும் போதே இது எத்தகைய முயற்சி என்பது தெரிய வரும். இதுவே அவரது இசையை அணுகவதற்கான வழிமுறை. இதன் மூலமே இது நாள் வரையில், மேற்கு கிழக்கின் கலப்பிசை என்பது, ஒன்றை melody என்றும் மற்றதை பின்னணியில் ஒலிக்கும் Harmony என்றும் மிக மேலோட்டமாகவே புரிந்து வைத்துள்ள இந்த இசையுலகிற்கு, புதிய திறப்புக்களைத்  தரவல்லது.

எனவே இம்முயற்சியின் முக்கியத்துவமாக இந்த சிறிய துணுக்கு சொல்வதை விட, இதன் பின்னணியில் இயங்கும் கலைஞனின் இசைநிலை (spirit of the composer) இங்கு முக்கியமானது. இதுவே இங்கே வருங்கால இசைக்கலைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டியது. Bach இசையமைத்த Art of Fugue தொகுப்பின் துவக்க இசையான Contrapuntus -1 மிகச் சிறிய முயற்சியே. ஆனால் அதன் வளர்ச்சியும், மேற்கிசை அதனால் முன்சென்றதுவுமே அதன் வெற்றி.



**பெரும்பாலும் இரண்டாம் இழை முதல் இழையின் Dominant\Subdominant Key இல் அமைக்கப்படுகிறது. அதாவது முதல் இழை Key of C என்றால் இரண்டாம் இழை அதன் Dominant keyயான Key of G இல் அமைகிறது. இது பற்றி பின்னர் பார்ப்போம்.

One comment

Leave a comment